Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

ஆகஸ்டு 06, 2021 10:46

கொடைக்கானல்: தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு கடந்த சில வாரங்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொடைக்கானலுக்கு கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பயணிகள் 72 மணிநேரத்திற்குள் கொரோனா மருத்துவப்பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச்சான்று பெற்றிருக்கவேண்டும். அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை கொடைக்கானல் நுழைவாயில் சோதனைச்சாவடியில் சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாபயணிகள் அதிகம் கூடும் இடங்களான வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, ஐந்து வீடு நீர்வீழ்ச்சி, கூக்கால் நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கும் சுற்றுலாபயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொடைக்கானல் செல்பவர்கள் மலைப்பகுதிகளில் உள்ள பட்டா இடங்கள் மற்றும் அரசு வருவாய் நிலங்களில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக பைக் மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் ஓட்டுபவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொடைக்கானல் நுழைவு வாயிலில் இன்று காலை முதல் அனைத்து வாகனங்களும் தீவிர தணிக்கை செய்யப்படுகிறது. வெளி மாநில வாகனங்களில் வருபவர்களை நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து உரிய சான்று உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அவ்வாறு இல்லாதவர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதும் நகருக்குள் நுழைந்ததும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதை காண முடிகிறது. சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் அவர்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் செல்கின்றனர். எனவே நகருக்குள் நுழையும் சுற்றுலா பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்