Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாராளுமன்றத்தை முடக்குவது தேச விரோதம்: எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு

ஆகஸ்டு 06, 2021 10:47

லக்னோ: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகேட்பு (பெகாசஸ்) விவகாரம், வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இது மத்திய அரசுக்கு பெரும் அதிருப்தியை அளித்து இருக்கிறது.

எனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி தொடர்ந்து குறைகூறி வருகிறார். அந்தவகையில் நேற்றும் அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் எதிர்க்கட்சிகள் மீது கடுமையாக குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற அலுவல்களை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவர்களது ஒரே நோக்கம், நாட்டின் வளர்ச்சிப்பாதையில் முட்டுக்கட்டை ஏற்படுத்துவதுதான். இது தேச விரோதம். இந்தியா தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாட்டின் முன்னோக்கிய இந்த இயக்கத்தை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது.

நாடு ஒருபுறம் கோலுக்கு மேல் கோலாக (ஒலிம்பிக் ஆக்கி போட்டியை போல) அடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறம், சிலர் தங்கள் அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற சுய கோல் அடிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். உணவு வழங்கல் திட்டத்தை குறித்து மோடி பேசும்போது, ‘முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கான உணவு தானியங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன’ என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின்போது வாரணாசி, சுல்தான்பூர், குஷிநகர், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்கும் பயனாளிகள் பிரதமர் மோடியுடன் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

தலைப்புச்செய்திகள்