Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருணாநிதி பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் தொடங்குக: திருமாவளவன்

ஆகஸ்டு 07, 2021 04:25

கருணாநிதி பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஆக. 07) வெளியிட்ட அறிக்கை:

"தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழகத்தில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை.

உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழகத்தில் பொருத்தமானதொரு இடத்தில், கருணாநிதி பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை (Moscow State Linguistic University) முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம். கருணாநிதியின் மூன்றாவது நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்