Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்டு 07, 2021 04:29

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்தவர் செந்தில்பாலாஜி. இவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் அருள்மணி என்பவர்கொடுத்த புகாரின் பேரில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக நேரில் ஆஜராகும்படி தற்போது தமிழக மின்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜிக்கு, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வழக்கைரத்து செய்யக் கோரி, குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்புநடந்தது. அப்போது, புகார்தாரர்கள் தங்களது பணத்தை திரும்பபெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.பரணிகுமார், அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறி அதற்கான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி என்.அலிசியா, அதுதொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆக.19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்