Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிதி மோசடி வழக்கில் கைதான கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்கள் சிறையிலடைப்பு: ஆக.19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ஆகஸ்டு 07, 2021 04:35

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எம்.ஆர்.கணேஷ்(50), எம்.ஆர்.சுவாமிநாதன்(48). ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிதி நிறுவனத்தை நடத்தி வந்த எம்.ஆர்.கணேஷின் மனைவி அகிலா (33) உட்பட 5 பேரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டைமாவட்டம் வேந்தன்பட்டியில்உள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்கியிருந்த எம்.ஆர்.கணேஷ்,எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இருவரையும் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

அதன்பின்பு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவம் மற்றும் கரோனாபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கும்பகோணம் முதலாம் எண் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஆக.19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்