Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கணவரின் வீரதீரச் செயலுக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முன்னாள் ராணுவ வீரர் மனைவி

ஆகஸ்டு 07, 2021 04:38

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணவரின் வீரதீரச் செயலுக்காக வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கு முன்னாள் ராணுவ வீரர் ராமமூர்த்தியின் மனைவி ரெங்கா வழங்கினார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணவரின் வீரதீரச் செயலுக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்காக முன்னாள் ராணுவ வீரரின் மனைவி வழங்கினார். ஆகஸ்ட் 1 முதல் 15-ம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயரிய விருது பெற்றவர்களை அழைத்து மண்டலம் வாரியாக கவுரவிக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை மகாராஜநகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமமூர்த்தி. இந்தியா - பாகிஸ்தான் போரின்போது உதவிநிர்வாகப் பொறியாளராக பணியாற்றிய பெருமைமிக்கவர். அவரது பணியை பாராட்டி 1971-ல்அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, அவருக்கு ‘ஷவ்ரியசக்ரா’ விருது வழங்கி கவுரவித்திருந்தார். இந்நிலையில் ராமமூர்த்தி கடந்த 2017-ம் ஆண்டு காலமானார்.

ராமமூர்த்தியின் வீரதீரச்செயலை பாராட்டி அவரதுமனைவி ரெங்கா ராமமூர்த்தியை (81) கவுரவிக்கும் விழா பாளையங்கோட்டை தூயயோவான் கல்லூரியில் நடைபெற்றது. திருநெல்வேலிமாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணுதலைமை வகித்தார். ராமமூர்த்தியின் திருவுருவப் படத்துக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, கர்னல்கள் ரவிக்குமார், அகிஷா, தினேஷ், லெப்டினென்ட் கர்னல் நிதிஷ்குமார், மகளிர் பட்டாலியன் அதிகாரி தன்வார் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் ரெங்கா ராமமூர்த்திக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. உடனடியாக அத்தொகையை கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்து ஆட்சியரிடம் அவர் வழங்கினார். வயது முதிர்ந்த காலத்திலும் தன்னலம் கருதாமல் அவர் செய்த தியாகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகளை நெகிழ்ச்சியடையச் செய்தது.
 

தலைப்புச்செய்திகள்