Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதுகில் குத்திய தினகரனைவிட எடப்பாடி எவ்வளவோ மேல்

ஏப்ரல் 29, 2019 05:16

டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனுக்கு நெருக்கமானவர்கள் என கருதப்படும் இரண்டாம்கட்ட தலைவர்கள் தொடங்கி சாதாரண தொண்டர்கள் வரை இதுபற்றி விவாதிக்கிறார்கள். இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தினகரனுக்கு மிக நெருக்கமான வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் மூலம் தாக்கல் செய்துள்ளார் சசிகலா. 
 
இதைப்பற்றி பேசும் அ.ம.மு.க. தலைவர்கள், "இரட்டை இலையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.விடம் இருந்து பிடுங்க சட்டப்போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதை அ.ம.மு.க. பொதுச்செயலாளராக இருந்து செய்ய முடியாது, அதனால்தான் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கினார். 

அவரை இரட்டை இலையைப் பெறுவதற்கான போராட்டத்தில் களமிறக்கிவிட்டுள்ளார். அதனால்தான் சசிகலா, தினகரனின் வழக்கறிஞர் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்'' என்கிறார்கள். ஆனால் இதைப்பற்றி பத்திரிகையாளர்களிடம் தினகரன் பேசிய செய்தி ஒன்று அ.ம.மு.க.வினரிடம் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

"இரட்டை இலை கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி நான் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை' என தினகரன் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இதே தினகரன்தான் முன்பு "அ.தி.மு.க.விற்கும் அதை உருவாக்கிய தலைவர்களான எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பி.எஸ்.ஸும் துரோகம் செய்துவிட்டார்கள். 

பொய்யான ஒரு பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றிக்கொண்டார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகிய இருவரின் பிடியிலிருந்தும் அ.தி.மு.க.வையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதற்காகத்தான் அ.ம.மு.க. என்கிற அமைப்பை தொடங்கியிருக்கிறேன். இதில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க.'' என்றார். 

இதனிடையே சசிகலா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு டிஸ்மிஸ் செய்யப்படும் என்கிறார்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள். சசிகலா மூலம் இந்த மனுவை தாக்கல் செய்து யாரை ஏமாற்றப் பார்க்கிறார் தினகரன் என கேட்கிறார்கள். இரட்டை இலை தொடர்பான வழக்கில் சசிகலாவுடன் தினகரனும் மனுதாரராக இருந்தார். 

அந்த வழக்கிற்கான வாதத்தில்தான் அ.ம.மு.க.விற்கு குக்கர் சின்னம் ஒதுக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதைக்கேட்ட நீதிபதிகள் "நீங்கள் இரட்டை இலை சின்னத்தையும் கோருவீர்கள், இன்னொரு பக்கம் உங்களுக்கென தனி சின்னத்தையும் கேட்பீர்களா?' என கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் "இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கே சொந்தம்' என தீர்ப்பளித்துவிட்டு "அ.ம.மு.க.விற்கு சுயேச்சை சின்னத்தைக் கொடுங்கள்' என உத்தரவிட்டதோடு, "அ.ம.மு.க.வை ஏன் அரசியல் கட்சியாக  பதிவு செய்யவில்லை' என்கிற கேள்வியையும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள்.
 

தலைப்புச்செய்திகள்