Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கர்நாடகாவில் கைது: தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

ஆகஸ்டு 08, 2021 12:00

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கர்நாடகாவில் கைது செய்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ‘இந்தியாவின் குரல்’ என்ற பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் காஷ்மீரில் விசாரணை நடத்தி உபயத் முக்தார் என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கர்நாடகாவின் மங்களூரு அருகிலுள்ள உல்லால் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஹிதனப்பாவின் மகன் பி.எம்.பாஷாவின் வீட்டில் கடந்த 4-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரளாவில் கடந்த ஆண்டு காணாமல் போன அவரது மகள் சிரியா நாட்டுக்குச் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தாரா என விசாரித்ததாக தெரிகிறது.

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மங்களூருவை சேர்ந்த அமர் அப்துல் ரஹ்மானை (29) என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, ஐஎஸ் அமைப்பின் கருத்துகளை இளைஞர்களிடம் பரப்பிய மைசூருவை அடுத்துள்ள பந்திப்பூரை சேர்ந்த முஸாமைல் ஹஸன் (27), பெங்களூருவை சேர்ந்த ஷங்கர் வெங்கடேஷ் பெருமாள் (எ) மௌவியா (23) ஆகியோரை கைது செய்தனர்.

தமிழகத்தை சேர்ந்த ஷங்கர் வெங்கடேஷ் 2 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்துக்கு மாறியுள்ளார். கடந்த 2016-ல் ஐஎஸ் தொடர்பான வழக்கில் கைதான ஹஸன் தமுதியின் தம்பி ஜப்ரிஜவ்ஹர் தமுதியை (36) விசாரணைக்குள் அதிகாரிகள் கொண்டு வந்தனர். உத்தர கன்னடா மாவட்டம், பட்கலில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது ஐஎஸ் அமைப்புடன் ஜப்ரிஜவ்ஹர் தமுதி தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ஐஎஸ் அமைப்பின் குரல்’ என்ற பெயரில் டிஜிட்டல் பத்திரிகை நடத்தி, அதில் ஐஎஸ் அமைப்பின் முக்கிய கட்டுரைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்துள்ளார். ஐஎஸ் அமைப்பின் கிளை ஐஎஸ்கேபி அமைப்பில் ஜப்ரிஜவ்ஹர் பயிற்சி பெற்றதும், அந்த அமைப்புக்காக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உ.பி., காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஐஎஸ் அமைப்பில் சேர்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்