Saturday, 22nd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுசூதனன் மறைந்த நிலையில் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார்? - ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் ஆலோசனை

ஆகஸ்டு 08, 2021 12:04

அதிமுக அவைத்தலைவராக கடந்த15 ஆண்டுகளாக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில், அடுத்த அவைத் தலைவர் யார் என்ற பேச்சு கட்சிக்குள் எழுந்துள்ளது. எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தன் 12-வது வயதிலேயே தொடங்கி,எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியதும் அவருக்காக சிறை சென்று தொடர்ந்து சட்டமேலவை உறுப்பினர், ஜெயலிலதா அரசில் அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இ.மதுசூதனன். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகஅதிமுகவின் முக்கியமான பொறுப்பில் அவைத் தலைவராக இருந்தஅவர், கடந்த 5-ம் தேதி காலமானார்.

கடந்த 2017-ல் கட்சியில் அணிகள் பிரிந்தபோது, ஓபிஎஸ் பக்கம்மதுசூதனன் நின்றார். அவைத் தலைவர் என்பதாலேயே அவர் இருக்கும் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அவைத் தலைவர் பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பேச்சு தற்போது கட்சியினரிடம் எழுந்துள்ளது. அதிமுகவில் தற்போதைய சூழலில்,ஓபிஎஸ் மற்றும் பழனிசாமி தரப்பினர் இடையில் இன்னும் கருத்துவேறுபாடு இருந்துகொண்டே இருக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வந்தாலும், கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் ஓபிஎஸ்தரப்புக்கு இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முக்கியமான அவைத் தலைவர் பதவிக்கு தகுதியான ஒருவரை தேர்வு செய்வதுகுறித்து விரைவில் ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், அவைத் தலைவர் பதவிக்குகுறிப்பிட்ட சிலரது பெயர்கள் அடிபடுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.தனபால், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செம்மலைபெயர்கள் அதில் உள்ளன.

அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைத்தது, கட்சியில் நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில்பெரும்பாலும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதிக அளவில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், இந்தமுறை அவைத் தலைவர் பதவிக்கு,கட்சியில் மூத்தவர் மற்றும் பொதுவான ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாக்குகள் அதிக அளவில் கிடைக்கவில்லை என்ற பேச்சு உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால், தனபாலுக்குஅவைத் தலைவராகும் வாய்ப்புகிடைக்கலாம் என்று நிர்வாகிகள்தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால் முன்னாள் அமைச்சர் பொன்னை யனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆக. 6,7,8-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுசூதனன் மறைவால்அந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆக.8 வரை அனைத்துநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து அவைத் தலைவரை தேர்வு செய்வார்கள் எனத் தெரிகிறது.
 

தலைப்புச்செய்திகள்