Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி

ஆகஸ்டு 09, 2021 10:32

சென்னை: கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவது தொடர்ந்து காணப்பட்டால் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், போலீசார் அந்த பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 30-ம் தேதி அறிவித்தார்.

உடனடியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் கடந்த ஜூலை 30-ம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரை; புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை; ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை; பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை;

ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை; அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை; ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை; கொத்தவால் சாவடி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் ஆகஸ்டு 9, காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக மேற்கூறிய இடங்களில் கடைகளை திறக்கலாமா? திறக்கக்கூடாதா? என்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், அந்த பகுதி வணிகர்கள் தங்கள் கடைகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து, சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான வணிக வளாகங்கள் இருக்கும் 9 இடங்களில் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை மூட உத்தரவிட்டு இருந்தோம். இந்நிலையில் வணிகர்கள் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் கடைகளை திறக்க வணிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத கடைகளை மூடி ‘சீல்’வைக்க அந்தந்த மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்