Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா?- தமிழக தலைவர் அண்ணாமலை விளக்கம்

ஆகஸ்டு 09, 2021 11:49

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவாரா என்பது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக டெல்லி பயணம் மேற் கொண்டுள்ள அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில்உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தப் பயணத்தில் 11 முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசவுள்ளேன். பெரும்பாலான அமைச்சர்களை ஏற்கெனவே சந்தித்து விட்டேன். சென்னை, கோவை, தூத்துக்குடி விமானநிலையங்கள் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளேன். அதேபோல, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை ஆக. 9-ம் தேதி (இன்று) சந்திக்க உள்ளேன்.

தமிழகத்தின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேச தமிழக எம்.பி.க்கள் மறுக்கிறார்கள். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரை சந்தித்து விரிவாகப் பேசியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், “தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறதே?” என்றுசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “யூகங்களுக்கு பதில்சொல்ல முடியாது. நடந்தால் நடக்கட்டும். அதேநேரத்தில், அரசியலில் எந்த கட்சியும், யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சில கட்சிகளில் தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. சில கட்சிகளில் சுதந்திரமாக சிலரால் செயல்பட முடியாது. அதனால்தான் பெரும்பாலானவர்கள் பாஜகவை தேடிவருகிறார்கள்.

எங்களுடைய சித்தாந்தத்தை நம்பி வருபவர்கள் யாராக இருந்தாலும், நாங்கள் ஏற்றுக்கொள் வோம்” என்றார்.
 

தலைப்புச்செய்திகள்