Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை: ஆண்டு முழுவதும் கொண்டாட காங். முடிவு

ஆகஸ்டு 10, 2021 11:27

75-வது சுதந்திர தின விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடுவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது ஆகஸ்ட் 14, 15-ம் தேதிகளில்சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் ஆண்டு முழுவதும் சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவது என கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கவுரவிக்கவும், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், போராட்டதில் உயிரிழந்தோர் குடும்பத்தை கவுரவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆகஸ்ட் 14-ம் தேதி நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. 75-வது சுதந்திர தினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் விழாக்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் கமிட்டி செய்யும்.

நமது சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் வாரிசுகளின் மகத்தான தியாகத்தை நாம் கொண்டாட வேண்டும். மேலும் ஆண்டு முழுவதும் இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும். அதற்காக தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனத்தையும் தெரிவிப்பதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்