Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த வழக்கில் 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆகஸ்டு 10, 2021 11:37

மன்னார்குடி: மன்னார்குடியில் தனியார் வங்கியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள், ஒருவருக்கு 9 ஆண்டுகள், மற்றொருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷத்தில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வந்தது (தற்சமயம் மன்னார்குடியில் செயல்பட்டு வருகிறது). கடந்த 7.5.2018 அன்று மதியம் இந்த வங்கிக்குள் புகுந்த 7 பேர் அடங்கிய கும்பல், வங்கி மேலாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, வங்கியில் இருந்த ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 550 ரொக்கம், 84 கிராம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இதுதொடர்பாக வங்கி மேலாளர் கோவிந்தராஜன் அளித்த புகாரின்பேரில், மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மன்னார்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி பிரேமாவதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மரியசெல்வம்(35), மீரான் மைதீன்(31), சுடலைமணி(31), மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அயூப்கான்(29), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த ராஜா(35) ஆகிய 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார்(31) என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை, சுடலைமணி என்ற மணிகண்டன்(25) என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜெயசங்கர் வாதாடினார்.

தலைப்புச்செய்திகள்