Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடல்சார் பாதுகாப்புக்கு பிரதமர் மோடி முன்வைத்த 5 அடிப்படை கொள்கைகள்

ஆகஸ்டு 10, 2021 12:50

புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து விவாதம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் கடல் வழித்தடங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், கடல் வர்த்தகத்தில் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும் கூறினார்.

நமது செழிப்பானது, கடல் வர்த்தகத்தின் சுறுசுறுப்பான ஓட்டத்தைப் பொறுத்தது. இந்தப் பாதையில் உள்ள தடைகள் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திற்கும் சவாலாக இருக்கலாம். சுதந்திரமான கடல் வர்த்தகம் இந்தியாவின் கலாச்சாரத்துடன் தொடர்புடையது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் கடல்சார் பாதுகாப்புக்கான 5 அடிப்படை கொள்கைகளையும் மோடி முன்வைத்தார். தடையற்ற சுதந்திரமான கடல் வணிகம், கடல்சார் பிரச்சனைகளை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைதியாக பேசி தீர்ப்பது, பொறுப்புள்ள கடல்வழி தொடர்பை ஊக்குவித்தல்,  கடல்சார் போக்குவரத்துக்கு உள்ள அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்கொண்டு முறியடிப்பது, கடல்சார் சூழல் மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பது ஆகியவை, கடல்சார் பாதுகாப்புக்கான அடிப்படை கொள்கைகள் என அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் குற்றத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பு குறித்து  முழுமையான முறையில் விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தலைப்புச்செய்திகள்