Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சித்தாந்த அடிப்படையில் திமுகவை கடுமையாக எதிர்க்க பாஜக முடிவு: டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை

ஆகஸ்டு 11, 2021 11:07

சித்தாந்த அடிப்படையில் திமுகவை கடுமையாக எதிர்க்க தமிழக பாஜகமுடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானதை தொடர்ந்து, புதிய தலைவராக, விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாநிலத் தலைவரான பிறகு முதல்முறையாக கடந்த6-ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு மத்திய அமைச்சர்கள், பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, எல்.முருகன்உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜக பொறுப்பாளரான தேசியபொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளின்போது தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகனும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், சித்தாந்த ரீதியாக இரு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தனிப்பெரும் ஆளுமைகள் தலைமை தாங்கிய கட்சிக்கு இப்போது இரட்டைத் தலைமை உள்ளது. இதனால் திமுகவை வலிமையுடன் எதிர்க்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது.

இதுபற்றி அமித் ஷா, நட்டாவுடன் அண்ணாமலை விவாதித்துள்ளார். சித்தாந்த ரீதியாக பாஜகவை திமுக மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. சமூக ஊடகங்களில் திமுக – பாஜக இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. எனவே, சித்தாந்த ரீதியாக திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்தால் மட்டுமே, அந்த கட்சிக்கு எதிரானவர்கள் பாஜகவை நோக்கி வருவார்கள் என்று தேசிய தலைவர்களிடம் அண்ணாமலை எடுத்துக் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை பிரதமர் மோடியின் சாதனையாக பிரச்சாரம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவது, முத்ரா கடன், பிரதமர் வீட்டு வசதித் திட்டம், வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம், மக்கள் மருந்தகம் போன்ற மத்திய பாஜக அரசின் திட்டங்களில் அதிகம் பயன் பெற்ற மாநிலம் தமிழகம் என்பதால் அதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றுஅமித் ஷாவும், நட்டாவும் அறிவுறுத்தியுள்ளனர்.

திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், இந்து அடையாளங்களுடன் உள்ளராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன்போன்ற மன்னர்களுக்கு விழா எடுப்பதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது குறித்தும் பாஜக மேலிடத்தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்