Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் 10 வயதுக்குள்ளாகவே புகையிலை பயன்படுத்தத் தொடங்கும் சிறுவர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஆகஸ்டு 11, 2021 11:50

இந்தியாவில் உள்ள சிறுவர்கள் 10 வயதுக்குள்ளாகவே புகையிலையை ஏதாவது ஒரு வடிவத்தில் அதாவது சிகரெட், பீடி, புகையிலை எனப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் என்று சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 13 முதல் 15 வயதுள்ள பள்ளி செல்லும் சிறுவர்களிடையே புகையிலைப் பயன்பாடு குறித்து ஐஐபிஎஸ் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 4-வது உலகளாவிய இளைஞர் புகையிலை சர்வே நடத்தப்பட்டது. பாலினம், வயது, பள்ளி அமைந்துள்ள இடம், கிராமப்புறம், நகர்ப்புறம், பள்ளி நிர்வாகம் (தனியார் அல்லது அரசு) ஆகியவை கணக்கில் எடுக்கப்பட்டன. ஏற்கெனவே 2003, 2006, 2009-ம் ஆண்டில் 3 சுற்று ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 987 பள்ளிகளில் இருந்து (544 அரசுப் பள்ளி, 443 தனியார் பள்ளி) 97 ஆயிரத்து 302 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 80 ஆயிரத்து 772 மாணவர்கள் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். இந்த ஆய்வின் நோக்கம் என்பது, சிறுவர்களிடையே புகையிலைப் பயன்பாடு, புகையிலை பயன்படுத்துவோருக்கு அருகே இருக்கும்போது அதை சுவாசித்தால் பாதிக்கப்படுதல் (passive smoking) விழிப்புணர்வு, புகையிலை சந்தை, புகையிலை குறித்த புரிதல், மனநிலை ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது

இந்த ஆய்வின் முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் 29 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாஸிவ் ஸ்மோக்கிங்கால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதாவது, ஒருவர் சிகரெட் புகைக்கும்போது அருகே இருந்து அந்தப் புகையை சுவாசிப்பவர் செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கர்ஸ் எனப்படுவர்.

அதேசமயம், 13 முதல் 15 வயதுள்ள பிரிவினரிடையே புகையிலை பயன்படுத்தும் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 42 சதவீதம் குறைந்துள்ளது. புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்துதல் என்பது பள்ளி செல்லும் மாணவர்களிடையே அதிலும் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இமாச்சலப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் மாணவர்களிடையே புகையிலை பழக்கம் குறைவாக இருக்கிறது.

10 வயதுக்குள்ளாகவே, 38 சதவீத சிறுவர்கள் சிகரெட் புகைக்கப் பழகிவிடுகிறார்கள், 47 சதவீதம் பேர் பீடி புகைக்கவும், 52 சதவீதம் பேர் புகையிலையை வேறு வடிவத்தில் பயன்படுத்தவும் பழகிவிடுகிறார்கள். சிகரெட் புகைப்பவர்களில் சராசரி வயது 11.5 ஆகவும், பீடி புகைப்பவர்களின் சராசரி 10.5 வயதாகவும், புகையிலையை வேறு வடிவத்தில் பயன்படுத்துவது 9.9. வயதிலும் தொடங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “ குழந்தைகளிடையே புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியப் பங்கு ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும்தான் இருக்கிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கூறி அவர்களைச் செம்மைப்படுத்த வேண்டும். புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசும் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள், பெரியவர்களிடையே புகையிலைப் பயன்பாடு குறைந்தால் சிறப்பாக இருக்கும்.

மாணவர்களின் பாடங்களில் தொடக்கக் கல்வியிலிருந்தே புகையிலை குறித்து விழிப்புணர்வை ஊட்டுவது அதைப் பயன்படுத்துவதிலிருந்து காக்கும்”. இவ்வாறு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்