Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ளை அறிக்கை ஒன்றும் இல்லாமல் போனதால் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை: பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கருத்து

ஆகஸ்டு 11, 2021 11:57

திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றும் இல்லாமல் போனதால், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுகிறது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவைமுன்னாள் துணைத் தலைவரும், அதிமுக எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்திலும், அவர்சார்ந்த இடங்களிலும் திமுக தங்களது பரம்பரை அடக்குமுறை அரசியலை தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் கொங்கு மண்டலத்தில், திமுக மீண்டும் தான் இழந்த செல்வாக்கை பெற்று விடலாம் என நினைத்தால், அது மிகப்பெரிய கனவாகத்தான் முடியும். எத்தனை அடக்குமுறைகளை திமுக ஏவிவிட்டாலும், அதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது. இன்னும் 15 பேர் மீது பொய்வழக்கு போட்டுவிட்டால், ஒன்றரை கோடி தொண்டர்கள், 2 கோடி தொண்டர்களாக மாறுவர். நாங்கள் உறையில் உறங்கும் வாளாக இருக்க மாட்டோம். களத்தில் இயங்குகின்ற வாளாக இருப்போம்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியையும், நகராட்சியையும் கைப்பற்றிவிடலாம் என்பதற்காகவும், எங்களை எல்லாம் பயமுறுத்திவிடலாம் என்பதற்காகவும் இந்த சோதனைப் பணியை திமுக தலைவர் தொடங்கிஉள்ளார். நிச்சயம் இதற்கெல்லாம் நாங்கள் அச்சப்பட மாட்டோம். எத்தனை சோதனை வந்தாலும், அதை சந்தித்து அதிமுக வெற்றியைப் பெறும். பொய்வழக்குகள் போடுவதை விட்டுவிட்டு, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பல வழக்குகள் போடப்பட்டன. தன் மீது போடப்பட்ட வழக்குகளை அவர் சந்தித்துவிடுதலை பெற்று வந்தார். இவர்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், மக்களுக்கு சேவைசெய்து, மக்களுடைய அபிமானத்தைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழியை தேடலாமே தவிர, இப்படிப்பட்ட அடக்குமுறை அராஜக அரசியலை திமுக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

திமுக அரசின் இந்த சோதனைமுழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. தற்போது சட்டப்பேரவை கூடப் போகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குறுதி அளித்த கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு உடனடி ரத்து செய்யப்படும், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, எதையும் திமுக நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவையில் நாங்கள் அது குறித்து பேசுவோம். மக்கள் மன்றத்தில் கேள்வி கேட்கின்றனர். எனவே, மக்களை திசை திருப்புவதற்கான முயற்சிதான் இந்த சோதனை நடவடிக்கை.

திமுகவில் தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களில் 16 பேர் மீது தற்போது இதேபோன்ற வழக்கு உள்ளது. நாங்கள் நிச்சயம் நிரபராதிகள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வருவோம். திமுகவினர் நேற்று முன்தினம் வெள்ளை அறிக்கை வெளியிட்டனர். அது பூதாகரமாக கிளம்பும் என அவர்கள் நினைத்தனர். ஆனால், அது ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.

பல வளர்ச்சிப் பணிகள் நடந்தது. அதற்காக கடன் வாங்கினோம். கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை, திருச்சி சாலை பாலம், அவிநாசி சாலை பாலம், கவுண்டம்பாளையம் சாலை பாலம் என கோவையில் மட்டும் கண்ணுக்கு முன்பு பல்லாயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. வளர்ச்சியடைந்து வருகிற ஒருநாடு, கடன் வாங்குவது என்பதுதெளிவான ஒன்றுதான். வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் பெறப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே, திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. அதற்காக இந்த லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் இருந்த காவல்துறையினர் நடுநிலையாக இருந்தனர். தற்போது இருக்கும் காவல்துறையினர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ காவல்துறையினராக உள்ளனர். எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இதுதான். ஜனநாயகத்தில் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மக்கள் திரண்டு போராடுவதுதான் ஒரே வழி.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்