Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா 2-வது அலையில் விடுதி வாடகை, உணவுக்கு ரூ. 2 கோடி பாக்கி வைத்த அரசு மருத்துவமனை

ஆகஸ்டு 11, 2021 12:24

கரோனா 2-வது அலையில் மருத்துவர்கள் தங்கிய விடுதி வாடகை, உணவுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.2 கோடி பாக்கி வைத்துள்ளதால் ஓட்டல், விடுதி உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா 2-வது அலை கடந்த மே, ஜூன் மாதங்களில் வேகமாகப் பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷிப்டு முறையில் 150 மருத்துவர்கள் பணிபுரிந்தனர். கரோனா வார்டுகளில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு கரோனா பரவாமல் இருக்க ஷிப்டு முறையில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

மேலும் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க, அவர்கள் சிவகங்கையில் உள்ள 4 தனியார் தங்கும் விடுதிகளில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் ஒரு தனியார் ஹோட்டல் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தற்போது கரோனா பரவல் குறைந்த நிலையில் மருத்துவர்கள் தனியார் விடுதியில் தங்குவதும், உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது. மேலும் மே முதல் ஜூலை முதல் வாரம் வரை தங்கும் விடுதிகளுக்கான வாடகை, உணவுக்கட்டணம் ரூ.2 கோடியை இதுவரை மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் தனியார் விடுதி, ஹோட்டல் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்ததும் நிதி வந்துவிடும். அதன்பிறகு பாக்கி முழுவதும் பட்டுவாடா செய்யப் படும்,’ என்றனர்.

தலைப்புச்செய்திகள்