Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 392 கன அடியாக அதிகரிப்பு

ஆகஸ்டு 11, 2021 03:38

மேட்டூர்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து அந்த அணைகளிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் 10 ஆயிரம் கன அடி வந்த தண்ணீர் நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தமிழக-கர்நாடக எல்லையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 3,046 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,491 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 11 ஆயிரத்து 392 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

அணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 74.03 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 73. 97 அடியாக சரிந்தது.

இன்று காலை கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் 11 ஆயிரத்து 299 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிய வாய்ப்பு உள்ளது.

தலைப்புச்செய்திகள்