Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவை தடுக்க 13 ஆயிரம் கிராமங்களில் தன்னார்வலர் குழு- அண்ணாமலை

ஆகஸ்டு 11, 2021 03:39

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ஜ.க. சார்பில் தேசிய சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 1,014 இடங்களில் பா.ஜ.க. தேசிய சுகாதார தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் நோக்கம் தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த களப்பணியாற்ற வேண்டும். கிராமம் கிராமமாக சென்று கொரோனா 3-வது அலையை எப்படி தடுப்பது, தடுப்பூசி போடுவதன் அவசியம், உணவு பழக்கம், யோகா பயிற்சி மேற்கொள்வது பற்றி குழுவினர் விளக்கி கூறுவார்கள்.

இந்தியா அளவில் 4.27 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். பிற நாடுகளை விட இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி எடுத்த முடிவுகளே. நம் நாட்டில் இதுவரை 53 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எந்த நாட்டிலும் இதுமாதிரி தடுப்பூசி செலுத்தவில்லை.

தேர்தல் பிரசாரத்தின்போது, தினமும் மத்திய அரசை தி.மு.க. குற்றம் சாட்டியது. 3 நாட்களுக்கு முன்பு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், பிரதமர் மோடியை மனதார பாராட்டுகிறோம் என கூறியிருக்கிறார்.

தமிழகம் கேட்டதை விட அதிகமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. டிசம்பர் 31-க்குள் இந்தியாவில் யாருக்கும் கொரோனா தொற்று இருக்கக்கூடாது என பிரதமர் மோடி நினைக்கிறார். கொரோனா நோயை இந்தியாவில் இல்லை என மாற்றுவதுதான் பா.ஜ.க. தன்னார்வலர் குழுவின் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்