Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்- ஐகோர்ட் உத்தரவு

ஆகஸ்டு 11, 2021 03:50

சென்னை: கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பி இருந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த குமார் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில், மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். சி.பி.ஐ.யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சி.பி.ஐ.யின் விசாரணைக்கு உதவும் வகையில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்