Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்- அமைச்சர் பொன்முடி

ஆகஸ்டு 11, 2021 03:51

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட வேல்ராஜ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் பதவி ஏற்பதற்கு முன்பு முதல்-அமைச்சரை சந்தித்தார். அப்போது அவர் அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்தவும், கல்வி ஆற்றலை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும், தொழில்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும்.

வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு பல்கலைக்கழக தரத்துக்கு துணைவேந்தர் உயர்த்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த காலம் போல் இல்லாமல் அரசுடன் கலந்து பேசி ஒற்றுமையுடன் செயல்படுவதாக துணைவேந்தர் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் குற்றச்சாட்டுக்கு இடமளிக்காமல் உயர்ந்த பல்கலைக்கழகமாக மாறும் என்று நம்புகிறேன்.

கல்லூரிகள் திறப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வருகிறார்கள்.
சுகாதாரத்துறை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனை பெற்று கல்லூரிகள் திறப்பது பற்றி முதல்-அமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்