Saturday, 22nd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்

ஆகஸ்டு 13, 2021 10:37

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு. கடந்த ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். இந்த கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் அன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார்.

அதன்பிறகு பட்ஜெட் தாக்கலுக்கான பணிகளை அரசு தொடங்கியது. தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். அனைத்து துறைகளின் ஆய்வுக்கூட்டம் முடிந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 13-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்ட் 14-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் பட்ஜெட் (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இ-பட்ஜெட் என்பதால் அமைச்சர்  பட்ஜெட்டை வாசிக்கும்போது, அந்த வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் ஓடுகிறது. இதன்மூலம் பட்ஜெட் தொகுப்பை எம்எல்ஏக்கள் கவனித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்