Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் அர்ச்சனைக்கான போற்றி பாடல் நூல்கள்- மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

ஆகஸ்டு 13, 2021 10:57

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை கடந்த 3-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோவில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பக்தர்களின் விருப்பத்துக்கேற்ப, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இறைவனின் பெருமைகளையும் பதிகம் மற்றும் பாடல்களால் உயர்வாக ஒப்புமை செய்து போற்றுவதற்கு போற்றி நூல்கள் வழிவகுக்கும். இந்த முயற்சியின் மூலம், கோவில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தமிழ் மொழி மூலம் அர்ச்சனை என்பதால் அகமகிழ்வார்கள். அறிந்த மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர் சொல்வதைப் பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் இந்த போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்