Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறந்த கலெக்டர்களாக சிவகங்கை, நீலகிரி கலெக்டர்கள் தேர்வு

ஆகஸ்டு 13, 2021 10:58

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய, மாவட்ட கலெக்டர், மருத்துவர், வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாராத தொண்டு நிறுவனம், சேவை புரிந்த சமூகப் பணியாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2021-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்குவதற்காக, மேற்கூறப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து தகுதியான நபரை தேர்வு செய்வதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் தலைமையில், கடந்த ஜூலை 8-ந் தேதி தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டராக நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, சிவகங்கை மாவட்ட கலெக்டர் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் - திருச்சி ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி; சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் - நாகர்கோவில் மரிய அலாசியஸ் நவமணி;

சேவை புரிந்த சிறந்த மருத்துவர் - பூ.பத்மபிரியா; மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் - வி ஆர் யுவர் வாய்ஸ், சென்னை; சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர்கள் தவிர மற்றவர்களுக்கான விருதுகள், சுதந்திர தின விழாவின்போது முதல்-அமைச்சரால் வழங்கப்படும். மாவட்ட கலெக்டர்களுக்கான விருதுகள், மாவட்ட கலெக்டர் மாநாட்டின்போது வழங்கப்படும்.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்