Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

50 கோடி தடுப்பூசி போட்டு வரலாற்றுச் சாதனை- ஜே.பி.நட்டா

ஆகஸ்டு 13, 2021 12:37

உலகத்திலேயே மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந்தேதி நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா கடந்த 7-ந்தேதி எட்டியிருக்கிறது. இது, கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்கு எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை ஆகும். கடினமான சூழல் மற்றும் எதிர்மறையான பிரசாரங்கள் மேற்கொண்டபோதிலும் இந்தியா அதனை சமாளித்து, பெரிய அளவிலும், வேகமாகவும் தடுப்பூசி திட்டத்தை திறமையாக செயல்படுத்தியது. இதற்கான புகழ் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான். கொரோனாவுக்கு எதிரான போராளிகள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் விடாமுயற்சி, துணிவு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால்தான் இது சாத்தியமானது.

கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடிய விதத்தை கண்டு ஒட்டுமொத்த உலகமே வியந்து நிற்கிறது. கொரோனா பரவத்தொடங்கிய 9 மாதத்துக்குள், இந்தியா ஒன்று அல்ல 2 இந்திய தடுப்பூசிகளை தயாரித்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது மிகவும் அரிதான சாதனை. இதற்கான புகழ் அனைத்தும் நமது டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குத்தான். எதிர்க்கட்சிகள், எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் மண்ணை வாரி தூற்றியப்போதிலும் 135 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் விடா முயற்சியுடன் செயல்படுத்தினார். கொரோனா வைரசுக்கு எதிராக நரேந்திர மோடி கையாண்ட விதம் முன்மாதிரியாது.

உலகத்திலேயே மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந்தேதி நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தது. முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 83 நாட்கள் ஆகியது. 2-வது 10 கோடி (20 கோடி) தடுப்பூசி 45 நாட்களிலும், 3-வது 10 கோடி (30 கோடி) தடுப்பூசி 29 நாட்களிலும், 4-வது 10 கோடி (40 கோடி) 24 நாட்களிலும், 5-வது 10 கோடி (50 கோடி) 20 நாட்களிலும் எட்டிப்பிடித்து 50 கோடி என்ற நிலையை அடைந்திருக்கிறோம். இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்கு பிரதமருக்கு, அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும்.

உற்பத்தி அதிகரித்திருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 136 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி இருக்கும். ஆகஸ்டில் (இந்த மாதம்) 26.65 கோடியும், செப்டம்பரில் 26.15 கோடியும், அக்டோபரில் 28.25 கோடியும், நவம்பரில் 28.25 கோடியும், டிசம்பரில் 28.5 கோடியும் தடுப்பூசி இருக்கும். கோவிஷீல்டு, கோவேக்சின், ரஷிய நாட்டை சேர்ந்த ஸ்புட்னிக், ஜாண்சன் அண்டு ஜாண்சன் தடுப்பூசிக்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்.

இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின் பயணம் சவாலான ஒன்று. பல தடைகளை தாண்டி 50 கோடி என்ற மைல் கல்லை தடுப்பூசி திட்டம் அடைந்திருக்கிறது. விரக்தியில் இருந்த எதிர்க்கட்சி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு 'பா.ஜ.க. தடுப்பூசி' என்று முத்திரையிட்டது. இது இந்தியாவையும், நமது விஞ்ஞானிகளையும் அவமதிக்கும் செயலாகும். எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை, பிரதமருக்கும் ஆதரவளிக்கவில்லை. அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை தடம் விலகச்செய்யவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் சில மாநிலங்கள் பற்றாக்குறை என்று பொய்களை கூறி, தடுப்பூசி போட மறுத்துவிட்டன. இதனால் தடுப்பூசி திட்டத்தின் வேகம் குறைந்தது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பா.ஜ.க. எப்போதும் பிரதமருடன் நிற்கிறது. முன்கள பணியாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் பயிற்சி பெற்ற திறமையான 1.5 லட்சம் சுகாதார தன்னார்வலர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர். கொரோனா பேரிடரில் நமது டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மனிதநேயத்தோடு சேவை செய்து முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியின்போது,​ ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி இந்தியாவை அடைய 83 ஆண்டுகள் ஆனது. மிக முக்கியமான போலியோ தடுப்பூசி கூட 23 ஆண்டுகள் ஆனது. டெட்டானஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு 54 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தடைந்தது. சமீபகாலமாக தடுப்பூசிகள் வழங்குவதில் வளர்ந்த நாடுகளை சார்ந்து இருந்த ஒரு நாடு, 2 உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசிகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கியது என்பதை இந்தியா உலகுக்கு காட்டியிருக்கிறது. மேலும் பல நாடுகளுக்கு தடுப்பூசி வினியோகம் செய்து இந்தியா உதவியிருக்கிறது. உலக நாடுகளின் பார்வையில், இந்தியாவில் இன்று கடல் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமரின் வலிமையான ஆற்றல் மற்றும் தொலைநோக்கு பார்வை இந்த பேரிடரில் ஒவ்வொரு இந்தியருக்கும் சக்திவாய்ந்த கேடயமாக திகழ்ந்தது. அவரது தலைமையின் கீழ் நாங்கள் சோர்வடையவோ அல்லது நிறுத்தவோ மாட்டோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவை 100 சதவீத தடுப்பூசி போடப்பட்ட தேசமாக மாற்றும் தீர்மானத்துடன் தடுப்பூசி இயக்கத்தை மேலும் துரிதப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்