Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுதந்திர தினவிழா -திருப்பூர் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை

ஆகஸ்டு 13, 2021 05:48

திருப்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலெக்டர் வினீத் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் சுதந்திர போராட்ட வீரர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று கவுரவப்படுத்துகிறார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனாவுக்கு எதிராக போராடிய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழா எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் மக்கள் கூடுவதை தவிர்த்து விழா நடத்த மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து விழா நடத்தப்பட உள்ளது.

மேலும் சுதந்திர தினவிழாவையட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின்படி, துணை கமிஷனர் ரவி மேற்பார்வையில் திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். அலுவலகம், தபால் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதுதவிர இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் இரவு முழுவதும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மாநகரில் மொத்தம் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  லாட்ஜ், தங்கும் விடுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கலெக்டர் கொடியேற்றும் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் நாளை முதல் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்