Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ட்விட்டர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஆகஸ்டு 13, 2021 06:16

புதுடெல்லி: டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். அதைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையி்ல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி “ ட்வி்ட்டரின் ஆபத்தான விளையாட்டு” என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தை செய்வதற்காக எங்கள் அரசியலை வரையறுக்கிறது, ஒரு அரசியல் தலைவராக இதை நான் விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன்.

இந்தியர்களாகிய நாங்கள் கேள்வி கேட்கிறோம். மத்தியஅரசுக்கு நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், எங்களுக்கான அரசியலை எங்களுக்காக வரையறுக்க நாங்கள் நிறுவனங்களை அனுமதிக்கிறோமா? அப்படியென்றால் என்ன வரப்போகிறதா? அல்லது நமக்கான அரசியலை நாமே வரையறுக்கப் போகிறோமா?

என்னுடைய ட்விட்டர் கணக்க முடக்கிவிட்டது ராகுல் காந்தி மீதான தாக்குதல் என்று சொல்லிவிட முடியாது, எளிதாக கடந்துவிட முடியாது. எனக்கு ட்விட்டரில் 2 கோடி ஃபாலோவர்ஸ் உள்ளனர், அவர்களின் கருத்துக் கூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் நியாயமற்றது மட்டுமல்ல, ட்விட்டர் நிறுவனம் நடுநிலையானது என்ற கருத்தையும் அந்நிறுவனம் மீறுகிறது.

சமூக ஊடகமான ட்விட்டரின் இத்தகைய நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் அரசியல் சூழலில் ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுப்பது எப்போதும் விளைவுகளை உண்டாக்கும். எங்களின் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதியில்லை. ஊடகத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆனால், ட்விட்டர் மூலம் நாம் நினைத்த கருத்தை முன்வைக்கலாம், அந்த ஒளிக்கீற்று இருக்கிறது என நான் நினைத்தேன். ஆனால், உண்மையில் ட்விட்டர் நிறுவனம் முழுமையான நடுநிலையானது அல்ல எனத் தெரிந்துள்ளது. இது ஒருதரப்பான தளம். ஆட்சியில் இருக்கும் அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவி்த்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்