Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் காலத்தின் தேவை- வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் கனவு திட்டம் நிறைவேறுமா?

ஆகஸ்டு 14, 2021 11:59

மதுரை: மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய் யப்படும் என நேற்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருப்பது மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், இதே மெட்ரோ ரயில் திட் டம் சென்னை, கோவை, மதுரைக்கு சேர்த்துதான் முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது சென்னையில் நிறைவடைந்து செயல்பாட்டில் உள்ளது. கோவையில் அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடக்கின்றன. ஆனால் அந்த அறிவிப்பு மதுரையில் மட்டும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கான ஆய்வுகள்கூட நடக்கவில்லை. தற்போது நிதியமைச்சர் தியாகராஜன் மீண்டும் அறிவித்து இருப்பது கடந்த காலத்தைப்போல் வெறும் அறிவிப்பாக மட்டுமில்லாமல் அதை செயல்படுத்த துரித தொடர் நட வடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. ஆனால் அகலமான சாலைகள், சென் னை, திருச்சி, கோவையைப் போல் மேம்பாலங்கள் அமைக்காமல் மதுரை புறக்கணிக்கப்படுவதால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் இன்னும் 'பெரிய கிராமமாகவே' உள்ளது. நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களின் எண்ணிக்கை, குறுகலான சாலைகள் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்பு ஆகியவை போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்க செய்கின்றன.

ஆன்மீக சுற்றுலாத்தலம், மருத்துவ தலைநகர், கலாச்சார நகர், பழமையான நகர் என பல பெருமைகளை தாங்கி நின்றும் போக்குவரத்து வசதியில் பின் தங்கிய நகராகவே மதுரை இன்னும் இருக்கிறது.

விரைவில் எய்ம்ஸ், பஸ் போர்ட் உள்ளிட்ட திட்டங்களும் வர உள்ளன. ஆனால், உள்ளூர் போக்குவரத்துக்கு டவுன் பஸ்களை மட்டுமே நம்பி இருக்கும் மதுரையில், மெட்ரோ ரயில் திட்டம் வெறும் வாக்குறுதியாக மட்டுமே தற்போது வரை இருந்து வருகிறது. அதனால் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் காலத்தின் கட்டாயம் என்று மதுரையை சேர்ந்த முக்கிய துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பணி நிறைவு பெற்ற நெடுஞ்சாலை துறையின் தலைமை பொறியாளர் (திட்டங்கள்) ஏ.கே.ராஜதுரை வேல் பாண்டியன் கூறியதாவது: மதுரை நகரில் உள்ள சாலைகள் அதிகபட்சம் 16 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளன. இதில் பறக்கும் சாலைப் பாலம் அமைக்க 17 மீட்டர் அகலம் தேவை. அதனால், தற்போது மதுரை நகரில் சாலை கட்டமைப்புகளை அகலப்படுத்தவோ, பறக்கும் பாலம் அமைக்கவோ சாத் தியமில்லை. மெட்ரோ ரயில் திட்டத்தை எளிதாக செயல்படுத்தலாம். பறக்கும் பாலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்த வெறும் 6 மீட்டர் அகலமே போதுமானது. ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்கு மட்டும், நகர்ப்புறங்களில் இடம் அதிகமாக இருக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்.

இந்த அடிப்படையில் நகர் பகுதிக்குள் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதாக இருந்தால் மேலூரில் தொடங்கி ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், பசுமலை, திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலத்துக்கும் பின் அங்கிருந்து மீண்டும் திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, சமயநல்லூர், பெரியார் பஸ் நிலையத்துக்கும் “யூ” வடிவில் இந்த பறக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம். தற்போது திருமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணி வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிடுகிறது. ஆனால் மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் 20 நிமிடங்களில் வந்துவிடலாம். இத்திட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பரங்குன்றம் ரயில் நிலையம், காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணியை ஒரே பாதையில் சேர்த்து விடலாம். இதே மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த நினைத்தால் மதுரையைச் சுற்றியுள்ள மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் உள் ளிட்ட புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மதுரையை சுற்றியும் வட்ட வடி வத்தில் அமைக்கலாம். என்றார்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டரானிக்ஸ் துறை பேராசிரியர் ஜே.கார்த்திகேயன் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் நகரில் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படாது. விபத்துகளும், நெரிசலும் ஏற்படாது. நாம் ஓரிடத்துக்கு 10 நிமிடத்தில் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டால் அவ்வாறே சென்றுவிடலாம். மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது அதிகரிப்பதால் பெட்ரோல், டீசல் செலவு குறையும். பறக்கும் பாலத்தில் இந்த ரயில் செல்வதால் இட நெருக்கடியை ஏற்படுத்தாது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது எளிது.

ஏற்கெனவே நகர்ப்புறங்களில் பல சாலைகளில் பறக்கும் பாலம் கட்டி வரு கிறோம். அதனால் நகர் சாலைகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல் படுத்துவது சாத்தியமே,’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்