Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமராவதி அணை தூர்வாரும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

ஆகஸ்டு 15, 2021 04:08

உடுமலை: திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 1958-ம் ஆண்டு 4 டி.எம்.சி., கொள்ளளவும், ஆண்டுக்கு  10 டி.எம்.சி., நீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டது. அணை வாயிலாக  திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள  54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 3 போகம் நெல் சாகுபடியும்,புதிய ஆயக்கட்டு பாசன நிலத்தில் கரும்பு, தென்னை என பயிர் சாகுபடி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. பருவமழைப்பொழிவு குறைவு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கேரள அரசு புதிதாக தடுப்பணைகள் மற்றும் அணைகள் கட்டியதால் வரத்து குறைவு, அணை கொள்ளளவு குறைவு உள்ளிட்ட காரணங்களினால் பாசனத்திற்கு நீர் பற்றாக்குறையானது.
 
இதில் அணை நீர்த்தேக்க பகுதியில்  அதிக அளவு வண்டல் மண், மணல் தேங்கியுள்ளதால்  நீர் இருப்பு பெருமளவு குறைந்துள்ளது. மழைக்காலத்தில்  தண்ணீரை முழுமையாக தேக்க முடியாமல் உபரியாக நீர் வெளியேற்றப்படுகிறது. மொத்தமுள்ள 90 அடி உயரத்தில் 4,047 மில்லியன் கன அடி நீர் இருப்பு கொண்ட அணை  63 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மணல் மற்றும் வண்டல் மண் அதிக அளவு தேங்கியுள்ளது.

அணை மொத்த நீர் இருப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை மண் பரப்பாக மாறியுள்ளது. இதனால் மொத்த கொள்ளளவில் 800 மில்லியன் கன அடி வரை தேக்க முடியாமல் வீணாக வெளியேற்றப்படுகிறது. பருவமழை சீசன் முடிந்ததும் பிப்ரவரி மாதத்தில்  கடைசி சுற்றுக்கு நீர் கிடைக்காததால்  இரண்டாம் போகம் சாகுபடி மேற்கொள்வதில்லை.

அணையில் தேங்கியுள்ள மணல் மற்றும் வண்டல் மண்ணை முறையாக அகற்றி அணை  தூர்வாரப்பட்டால் 800 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும்.மேலும் கூடுதல் நாட்கள் நீர் வழங்கலாம். எனவே அமராவதி அணையில் முழு கொள்ளளவு நீர் தேக்கும் வகையில் தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு பட்ஜெட்டில் மேட்டூர், வைகை, அமராவதி உள்ளிட்ட அணைகள்  தூர்வாரப்பட்டு பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

3 ஆறுகள் இணைந்து கூட்டாறாக அணைக்கு நீர் வரும் பகுதியில் 15 அடி வரை மணல் பரப்பு தேங்கியுள்ளது. இப்பகுதியை தூர்வாரினால் மணல் வாயிலாக அரசுக்கு வருவாய் கிடைக்கும். அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதியளித்தால் அணையும் ஆழமாகும். விளை நிலங்களும் வளமாகும்.

இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அணையை  தூர்வாரினால் 800 மில்லியன் கன அடி நீர் கூடுதலாக தேக்க முடியும் என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தரவு வந்ததும் பணிகள் தொடங்கும் என்றனர்.

தலைப்புச்செய்திகள்