Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும் - மந்திரி எஸ்.டி.சோமசேகர்   

ஆகஸ்டு 16, 2021 10:33

பெங்களூரு: கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் உள்ளது. ஆனாலும் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களால் கர்நாடகத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மைசூரு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டுமா? என தெரியவில்லை.

தசரா விழாவை கொண்டாடுவது குறித்து வரும் நாட்களில் உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் தசரா விழா குறித்து ஆலோசனை நடத்தப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும். தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது பற்றியும் முடிவு எடுக்கப்படும். கடந்த ஆண்டு தசரா விழா கொண்டாடியதற்கு ஆன செலவு போக ரூ.2.91 கோடி பாக்கி உள்ளது. அந்தப் பணத்தை வைத்து இந்த ஆண்டு தசரா கொண்டாடப்படும்.

கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்க முன்எச்சாிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். எச்.டி.கோட்டை அருகே உள்ள பாவலி சோதனைச்சாவடியில் பணம் வாங்கி கொண்டு கேரளா வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் யார் பணம் வாங்கினர் என்று தெரியவில்லை. பணம் வாங்கியவர்கள் யார் என்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

கொரோனா நெகட்டிவ் அறிக்கையுடன் வராதவர்களை எக்காரணம் கொண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாது. அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பாக மக்கள் பணி செய்கிறார். இதில் சந்தேகம் வேண்டாம். அவர் 2 ஆண்டுகளும் முதல் மந்திரியாக தொடருவார் என தெரிவித்தார்.

 

 

தலைப்புச்செய்திகள்