Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு

ஆகஸ்டு 26, 2021 02:11

சென்னை: பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டு மிகக் குறைவாக இருந்தது.
 
இதனால் அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்கு தடையாக உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கையை கண்டறிந்து பரிந்துரை செய்யவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கமி‌ஷன் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டு இருந்தது.

அந்த கமி‌ஷன் பரிந்துரைகளை ஏற்று, அதை செயல்படுத்தும் விதமாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது போல் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் ஏனைய தொழிற்கல்வி படிப்புகளிலும் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த 4-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் ஆனது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- பல்கலைக்கழகங்கள், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவம், சட்டப்படிப்புகள் முதலியனவற்றில் அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கை பெறுவதற்கான காரணங்களை மதிப்பிடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நீதியரசர் த.முருகேசன் தலைமையின் கீழ் மூத்த அலுவலர்கள் அடங்கிய ஆணையம் ஒன்றை அரசு அமைத்தது.

அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே உண்மையான ஏற்றத் தாழ்வுகள் இருப்பது ஆணையத்தின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. அரசானது ஆணையத்தின் பரிந்துரையை கவனமாக ஆய்வு செய்து பின்பு, பல்கலைக்கழகங்கள் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், மருத்துவம், சட்டம் மற்றும் பிற தொழிற்கல்வி பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையில், மாநில அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் குறித்த சில சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்து, அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கிடையே உண்மையான சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

ஆணையத்தின் பரிந்துரைகளை கவனமாக கருத்தில் கொண்ட பின்பு, மாநில அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை, தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன் வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்