Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

ஆகஸ்டு 28, 2021 11:24

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு தினசரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் 200-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்து 273 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,257 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று 30 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. அங்கு இருந்து ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்காக கார்கள், ரெயில்கள் , பஸ்கள் முலமாக கோவைக்கு வருகின்றனர். அவர்களின் வருகையை மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடுக்க வேண்டும்.

மேலும் மாநகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடும் பகுதிகளை கண்காணித்து சமூக இடைவெளியை கண்காணிக்க வேண்டும். தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டை வீட்டு வெளியே வராதபடி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவாக மேற்கொண்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

தலைப்புச்செய்திகள்