Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரியில் நாளை மறுநாள் கடைஅடைப்பு போராட்டம்

ஆகஸ்டு 28, 2021 11:31

ஊட்டி: ஊட்டியில், நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை எனக் கூறி நகராட்சி நிர்வாகம் 736 கடைகளுக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

இதனால், கடந்த 3 நாள்களாக நகராட்சி மார்க்கெட் மூடப்பட்டு, கடைகள் திறக்கப்படாததால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் ஊட்டியில் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முஸ்தபா, துணைத் தலைவர் ரெக்ஸ் மணி, பொருளாளர் ராஜா முகமது, அன்வர்கான், குமார் மற்றும் மாவட்டம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

வாடகை நிலுவை பிரச்சனை குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகளின் பொருட்களை வெளியே எடுக்க விடாமல் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் கடைகளில் இருப்பு உள்ள நிலையில், கடைகளில் உள்ள கோழிகள் இறந்தும், மீன், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகியும் துர்நாற்றம் வீசி வருவதால் மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிக் கடைகளின் வாடகை பலமடங்கு உயர்த்தப்பட்டதால், வாடகையை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளோம். அரசு, கடைகளுக்கான வாடகையை நிர்ணயித்தால், அந்த வாடகையை வியாபாரிகள் செலுத்தி விடுவர்.

ஊட்டி நகராட்சி ஆணையரை மாற்றக் கோரியும், வாடகை பிரச்சனை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், வருகிற 30-ந்தேதி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இப்பிரச்சனைக்கு திங்கட்கிழமைக்குள் தீர்வு காணப்படாவிட்டால் மார்க்கெட் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்