Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகரிக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு

ஆகஸ்டு 30, 2021 10:41

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும். கேரளாவில் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையினர் நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர். இதில் கொரோனா பாதித்தோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் காட்டிய அலட்சியமும் நோய் பரவலுக்கு காரணம் என தெரியவந்தது. இதுபோல மாநிலம் முழுவதும் மலையோர மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதையும் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்