Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தயார் நிலையில் 11 ஆயிரம் பள்ளிக்கூடங்கள்- மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடம் நடத்தப்படும்

ஆகஸ்டு 31, 2021 01:34

சென்னை: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பள்ளி- கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன. 6 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்டது. அதன் பின்னர் தொற்று பரவியதால் மூடப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் நாளை பள்ளிகளை திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளை கல்வித்துறை செய்துள்ளது. மாணவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்று வர பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டன. வகுப்பறைகள், கழிவறைகள், பெஞ்சு, நாற்காலிகள், அலுவலக அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.

நாளை பள்ளிகள் திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்படுவதால் 3 ஆயிரம் அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 3 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளும் திறக்கப்படுகிறது.

4 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 1000 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. 10, 12-ம் வகுப்பில் 20 லட்சம் மாணவர்களும், 9, 11-ம் வகுப்பில் 20 லட்சம் மாணவர்களும் நேரடியாகவும், சுழற்சி முறையிலும் வகுப்புக்கு வருகிறார்கள். பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சுழற்சி முறையில் வரவழைக்கப்படுகிறார்கள்.

குறைந்த அளவு மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் தினமும் வகுப்புகளும், அதிக எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து சென்னையில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-

நாளை பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பறை முன்பும் கிருமி நாசினி பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் போட்டு வராத மாணவர்களுக்கு பள்ளியில் இருந்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் மாணவர்களை வீட்டில் இருந்து சுடுநீர் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் பள்ளியில் 10, 12-ம் வகுப்பில் 1,060 மாணவர்களும், 9, 11-ம் வகுப்பில் 1,100 மாணவர்களும் உள்ளனர். அதனால் 53 வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியே சென்றவுடன் வகுப்பறையை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு பிரிவாகவும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மற்றொரு பிரிவாகவும் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பள்ளிகளை நாளை திறக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் பயப்பட தேவையில்லை. வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமர்த்தப்படுகிறார்கள். அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் இல்லாதவர்களுக்கு பள்ளிகளில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் உங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வையுங்கள். ஆசிரியர்களுக்கு 95 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களை முதலில் மனதளவில் தயார்படுத்தும் வகையில் இணைப்பு பாடங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்