Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதிய மழை பெய்யாததால் பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை

ஆகஸ்டு 31, 2021 03:25

குடிமங்கலம்: உடுமலை சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., பாசனப்பகுதி நான்கு மண்டலமாக விரிவுபடுத்தும் முன்பு பருத்தி பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் பாசன நாட்கள் குறைப்பு, நோய்த்தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடியே இல்லாத நிலை உருவானது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் வீரிய ஒட்டு ரக விதைகள் வருகை, சில மானியத் திட்டங்களால் பி.ஏ.பி., இரண்டாம், நான்காம் மண்டல பாசனத்துக்கு பரவலாக ஆடிப்பட்டத்தில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பாசனத்துக்கு மக்காச்சோளமே அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மானாவாரியாக, விருகல்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். வழக்கமாக ஆடிப்பட்டத்தில் விதைப்புக்கு பிறகு மழை பெய்யும்.

நடப்பாண்டு இதுவரை செடிகளுக்கு தேவையான ஈரம் கிடைக்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் செடிகள் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் தீவிர மழை பெய்யவில்லை. இதனால் மானாவாரியாக பருத்தி நடவு செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

பருத்தி சாகுபடியில் அறிமுகப்படுத்தப்படும் விதை ரகங்கள், புதிய தொழில்நுட்பங்களை விளைநிலங்களில் செயல்படுத்தும் அளவுக்கு வேளாண்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை. இதனால் தனியாரிடம் ஆலோசனைகள் பெற்று சாகுபடி மேற்கொள்ளும் போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம் என்றனர்.

தலைப்புச்செய்திகள்