Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

ஆகஸ்டு 31, 2021 04:54

காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை கடந்த இரு வாரங்களில் 10 முறை உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 15-ம் தேதி அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டுச் சென்றபின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் தீவிரவாதிகள் மீது ஈர்ப்புடன் இருப்போர் தற்போது இந்தியாவைத் தாக்க சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

உளவுத்துறையின் முக்கிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 2 வாரங்களாகவே உளவுத்துறை மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். அதற்கான திட்டமிடலும் நடந்து வருகிறது.

கடந்த 15 நாட்களில் 10 முறை மத்திய அரசுக்கு உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரியவர்கள் எல்லைப் பகுதியில் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கண்காணிப்பை பலப்படுத்தக் கோரியுள்ளோம்.

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாதிகளின் தகவல் தொடர்பை உளவுத்துறை இடைமறித்துக் கேட்டுவருகிறது. அதில் காஷ்மீர் பகுதியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

கன்னிவெடி தாக்குதல், கையெறி குண்டுவீசுதல், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல், சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மூலம் ஸ்ரீநகரில் பொதுமக்கள் கூடுமிடங்களைக் குறிவைத்தல் போன்றவற்றுக்கு திட்டமிடப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜான்திராத் பகுதியை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 5 பேர் அடைந்துள்ளனர். அங்கிருந்து காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்குள் நுழையக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்கள் திடீரென பரபரப்பாக மாறியுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கைக் குறிவைத்து உறுதி செய்யப்படாத சில வீடியோக்கள் வலம் வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அந்த வீடியோக்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். காஷ்மீரை நோக்கி நடத்த திட்டமிட்டப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம்” எனத் தெரிவித்தார்.

இந்த மாதத்தின் 3-வது வாரத்தில் தலிபான் தீவிரவாதத் தலைவர்களுடன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது இந்தியாவை நோக்கி நடத்தும் ஆப்ரேஷனுக்கு உதவுவமாறு தலிபான்களிடம் ஜெய்ஷ் இ முகமது கேட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்