Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக வெங்கட்ராமன் நியமனம்

செப்டம்பர் 01, 2021 11:34

சென்னை: கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக பா.வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வந்த அருண்குமார் பாதுரி பணி ஓய்வு பெற்றதையடுத்து, மேன்மையுறு விஞ்ஞானியாக பணியாற்றி வந்த பா.வெங்கட்ராமன், புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள வெங்கட்ராமன், கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உயர்நிலை கல்வியை நிறைவு செய்தார். மேலும், முதுகலை கல்வியை 1983-ம் ஆண்டு நிறைவு செய்து, அதே ஆண்டில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மும்பை பயிற்சி பள்ளியில், 27-வது பிரிவில் விஞ்ஞான அதிகாரியாக தேர்வு பெற்றார். பயிற்சியை நிறைவு செய்து, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 1984-ம் ஆண்டு கதிரியக்க உலோகவியல் சோதனைக் கூடத்தில் பணியில் சேர்ந்தார். மேலும், 37 ஆண்டு காலம் பல்வேறு பிரிவுகளில் தன் பங்களிப்பை வழங்கி வருகிறார்.

இந்திய அணு ஆராய்ச்சி துறையின் உயரிய விருதான ஹோமி பாபா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதை 2007-ம் ஆண்டு பெற்றுள்ளார். இதுதவிர சாதனை குழுவுக்கான பரிசுகளையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சிறந்த கட்டுரைக்கான விருதுகளையும் பெற்றுள்ளன.

மேலும், 2006-07 ஆண்டில் ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனத்தில் வருகை தரும் விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் போலி சிலைகளை கண்டறியும் ஆய்வுக்குழுவில் இடம் பெற்றிருந்தார். கல்பாக்கம் நகரியப் பகுதியில் உள்ள அணுசக்தி மருத்துவமனையின் டீனாக இவரது மனைவி பணிபுரிந்து வருகிறார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்தவர் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்