Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வலையில் சிக்கிய தங்க இதய மீன்கள்... ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்

செப்டம்பர் 02, 2021 10:48

மும்பை: மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. இவர் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த 28ம் தேதி, முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். முதல் நாளிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின. 

இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்தார். வலையில் சுமார் 150  மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்,.

கோல் மீன் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது. இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு  பயன்படுத்தப்படுகின்றன. மீனவர்கள் இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டன. சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

கோல் மீனின் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ். இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இது மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் இந்த மீன் தங்க இதயம் கொண்ட மீன் என்று வர்ணிக்கப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்