Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொள்ளாச்சி டாப்சிலிப்-குரங்கு நீர்வீழ்ச்சி இன்று திறக்கப்பட்டது

செப்டம்பர் 02, 2021 02:24

பொள்ளாச்சி: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தில் இருந்ததால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசின் தொடர் நடவடிக்கையால் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. நீலகிரி, வால்பாறை போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

ஆனால் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களான குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப் போன்ற பகுதிகள் இதுவரை திறக்கப்படமால் இருந்தது. இதனால் வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகள், குரங்கு நீர்வீழ்ச்சி மூடப்பட்டிருப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதாக ஆனைமலை புலிகள் காப்பக வனபாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி இன்று காலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சி, சின்னக்கல்லார், நல்லமுடி காட்சி முனை, மானம்பள்ளி உள்ளிட் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது.

சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பம், குடும்பமாக டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வரத் தொடங்கினர். இதனால் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் அதிக வாகன போக்குவரத்து காணப்பட்டது.

அவர்கள் குரங்கு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்கு உள்ள வளர்ப்பு யானைகளை பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகளை யானையின் அருகே செல்லவும், உணவு கொடுக்கவும், யானை சவாரி செய்வதற்கும் வனத்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். சுற்றுலா பயணிகள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து குவிந்திருந்தனர்.

இதற்கிடையே யானை சவாரியை தொடங்கலாமா? என்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்