Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதுமலை புலிகள் காப்பகத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செப்டம்பர் 03, 2021 03:44

ஊட்டி: நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டமாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களையும், இயற்கை எழிலையும் கண்டு ரசிப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வார்கள். குறிப்பாக கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடைவிழா கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

கொரோனா முதல் அலைக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா 2-வது அலை பரவவே சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 23-ந் தேதி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்தனர். தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் திறந்தபோதும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படவில்லை.

இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் அதன் நுழைவு வாயில் வரை வந்துவிட்டு வெளியில் நின்று ஏக்கத்துடன் பார்த்துவிட்டு திரும்பி சென்று வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ஊட்டியில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும் அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு நேரடியாக கார், வேன் போன்ற வாகனங்களில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரத்தொடங்கினர்.

சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் வனத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தனர். மேலும் கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய வைத்தனர். மேலும் முக கவசம் அணிந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அவர்கள் நுழைவு வாயிலில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் வாகன சவாரி மேற்கொண்டு முதுமலை புலிகள் காப்பகம் முழுவதும் சுற்றி பார்த்து அங்குள்ள இயற்கை காட்சிகளை குடும்பத்தோடு கண்டு ரசித்ததோடு, வளர்ப்பு யானைகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதுமுலை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 50 சதவீத சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 6-ந் தேதி முதல் யானை சவாரி தொடங்கப்படும். அன்றைய தினம் தங்கும் விடுதிகளும் திறக்கப்பட உள்ளது. அதிலும் 50 சதவீதத்தினர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்