Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவை முழுவதும் 2 நாட்களில் பேனர்களை அகற்ற உத்தரவு: உயர்நீதிமன்ற நோட்டீஸால் வருவாய்த்துறை நடவடிக்கை

செப்டம்பர் 03, 2021 04:47

புதுவை: பொது இடங்களில் அனுமதியின்றி பேனர், கட்அவுட் வைக்க தடை உள்ளது. இருப்பினும் தடையை மீறி அரசியல்கட்சி தலைவர்களின் பிறந்தநாள், திருமண நாள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த பேனர்கள், கட்அவுட்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் இடையூறை ஏற்படுத்துகின்றன. வியாபார நிறுவனங்களை மறைத்து பேனர்கள் வைப்பதால் பல்வேறு தகராறுகளும் நடக்கின்றன.

புதுவையில் பேனர் தடைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதுவையில் பேனர், கட்அவுட் தடைச் சட்டத்தைமுழுமையாக அமல்படுத்த உத்தரவிடக்கோரி புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேங்காய்திட்டு புதுநகரைச் சேர்ந்த செல்வமணிகண்டன் என்பவரும் பொதுநல புகார் அளித்தார்.

இதனடிப்படையில் பேனர், கட்அவுட்டுகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துவிளக்கம் தரும்படி புதுச்சேரி வருவாய்த்துறைக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து புதுவை வருவாய்த்துறை அதிகாரி செந்தில்குமார், புதுவை போக்குவரத்து சீனியர் எஸ்பி, புதுவை, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், "உயர்நீதிமன்றம் மற்றும் பொதுநல புகாரின் அடிப்படையில் நடைபாதை, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர், கட்அவுட், ஹோர்டிங்ஸ்களை 2 நாட்களில் உடனடியாக அகற்ற வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளதால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக தகவல்களை வருவாய்த்துறையிடம் சமர்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்