Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 3 அடி உயர்வு

செப்டம்பர் 06, 2021 01:44

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 750 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 609 கன அடியும் என மொத்தம் 16 ஆயிரத்து 359 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன், மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.

இதனால் ஒகேனக்கலில் தற்போது 20 ஆயிரம் ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒனேக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல்-மேட்டூர் அணை இடையே உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் வரும் தண்ணீரை விட மேட்டூருக்கு கூடுதலாக தண்ணீர் வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 22 ஆயிரத்து 875 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 22 ஆயிரத்து 76 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 5 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 650 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 4-ந் தேதி 69.39 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 71.10 அடியாக உயர்ந்தது. இன்று மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 72.69 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 3 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்