Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நித்யானந்தாவின் பெண் சீடர்கள் விரட்டியடிப்பு: பொதுமக்கள் ஆத்திரம்

செப்டம்பர் 07, 2021 10:19

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அத்தாயி (52). இவர் நித்யானந்தாவின் தீவிர பக்தை ஆவார். இதனால் அத்தாயி கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று விட்டார். அவரது குடும்பத்தினர் பலமுறை அழைத்தும், அவர் திரும்ப வரவில்லை. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனது குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த ஒரு மாதமாக மகன் பழனிசாமி, இவருடைய மகள் சஸ்மிதா ஆகியோருடன் அத்தாயி செல்போனில் பேசி வந்துள்ளார். மேலும் ஆசிரமத்தில் தன்னை வெளியே விட மறுப்பதாகவும், நீங்கள் வந்து அழைத்து செல்லுங்கள் என்று வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து ஒரு காரில் நித்தியானந்தாவின் 2 பெண் சீடர்களுடன், அத்தாயி அய்யம்பாளையத்துக்கு வந்தார். இதையறிந்து அந்த பகுதியில் அவருடைய உறவினர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

மேலும் அவர்கள் காரை சூழ்ந்து கொண்டு அத்தாயியை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு மறுத்த நித்யானந்தாவின் பெண் சீடர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் அத்தாயியை பொதுமக்கள் ஆம்னி வேன் ஒன்றில் ஏற்றி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். இதற்கு பெண் சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் பயந்து போன 2 பெண் சீடர்களும் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.
 

தலைப்புச்செய்திகள்