Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காதலி மடியில் கடைசி மூச்சு - சித்தார்த் சுக்லாவின் மரணமும்... தொடரும் மர்மங்களும்    

செப்டம்பர் 07, 2021 10:27

சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தவர் சித்தார்த் சுக்லா. 40 வயதே ஆன இவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் சித்தார்த் சுக்லா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். அதே சீசனில் சக போட்டியாளராக பங்கேற்ற ஷேனாஸ் கில்லை, நடிகர் சித்தார்த் காதலித்து வந்துள்ளார். காதலன் சித்தார்த்தின் திடீர் மரணத்தால் ஷேனாஸ் பேரதிர்ச்சியில் இருக்கிறாராம். இந்நிலையில் சித்தார்த் இறப்பதற்கு முந்தைய நாள் (செப் 1-ந் தேதி) இரவு என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது. அன்றைய தினம் இரவு 9.30 மணி அளவில் வீட்டிற்கு வந்திருக்கிறார் சித்தார்த். வீட்டிற்குள் நுழைந்ததும் தனக்கு ஏதோ மாதிரி இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். 

அந்த சமயத்தில் வீட்டில் இருந்த சித்தார்த்தின் அம்மாவும், காதலி ஷேனாஸும் சேர்ந்து லெமன் ஜூஸும், ஐஸ்கிரீமும் கொடுத்திருக்கிறார்கள். அதை சாப்பிட்ட பின்னரும், தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் சித்தார்த். இதையடுத்து ஓய்வெடுக்குமாறு அம்மாவும், ஷேனாஸும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பின்னர் படுக்கைக்கு சென்ற சித்தார்த்தால் தூங்கவும் முடியவில்லையாம். இதையடுத்து தன் அருகிலேயே இருக்குமாறு காதலி ஷேனாஸிடம் கூறியிருக்கிறார். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஷேனாஸின் மடியில் தலை வைத்து தூங்கியிருக்கிறார் சித்தார்த். இதையடுத்து ஷேனாஸும் தூங்கிவிட்டார். 

காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது சித்தார்த் எந்தவித அசைவுமின்றி இருந்திருக்கிறார். பலமுறை எழுப்ப முயன்றும் கண்ணை திறக்கவில்லையாம். இதனால் பதற்றமடைந்த ஷேனாஸ் பயந்துபோய் அவரின் குடும்பத்தாரை அழைத்திருக்கிறார். அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை வரவழைத்தனர். சித்தார்த்தை பரிசோதனை செய்த மருத்துவரோ அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். 

சித்தார்த்தும் -  ஷேனாஸும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார்களாம். அதற்குள் சித்தார்த் மரணமடைந்திருப்பது ஷேனாஸை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. சித்தார்த்தின் மறைவை ஏற்க முடியாமல் ஷேனாஸ் தவிப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே சித்தார்த்தின் உள் உறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்காக மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அவரின் மரணத்திற்கான மர்மம் நீங்கும் எனத் தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்