Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செப்டம்பர் 07, 2021 11:21

நீட் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனினும் பொதுத்தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவர்கள், தனித்தேர்வர்களுக்காக கடந்த 25-ம் தேதி தேர்வு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

இதனிடையே மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். சிபிஎஸ்இ விருப்பத் தேர்வு நடைபெறும் நிலையில் நீட் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி கான்வில்கர் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோயப் ஆலம் ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறும்போது, ‘‘சிபிஎஸ்இ விருப்பத் தேர்வை எழுதும் சுமார் 25,000 மாணவ, மாணவியர் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 9-ம் தேதி இயற்பியல் தேர்வு நடைபெற உள்ளது. அடுத்தடுத்து செப்டம்பர் 15 வரை தேர்வுகள் நீடிக்கின்றன. நாங்கள் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரவில்லை. விருப்ப தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை கூறும்போது, "நீட் நுழைவுத் தேர்வுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வை தள்ளிவைக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதிகள் கூறியதாவது:

சிபிஎஸ்இ விருப்பத் தேர்வை சுமார் ஒரு சதவீத மாணவர்கள் மட்டுமே எழுதுகின்றனர். அவர்களுக்காக நீட் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க முடியாது. புகார் கூறும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம். இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ம்தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறலாம். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

தலைப்புச்செய்திகள்