Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கேட்டு சிலையுடன் ஊர்வலம்

செப்டம்பர் 07, 2021 11:27

திருப்பத்தூர்: விநாயகர் சிலைகளை தலையில் சுமந்தபடி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி அமைப்பினர்.
விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என வலியுறுத்தி விநாயகர் சிலையை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்ற இந்து மக்கள் கட்சியினரிடம் இருந்து சிலைகளை காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

வரும் 10-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளன. கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது, விஜர்சன ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும். அதேபோல, விஜர்சன ஊர்வலத்தையும் நடத்தவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் செல்வம், மாவட்டத் தலைவர் ரமேஷ் ஆகியோர் விநாயகர் சிலைகளை தலையில் சுமந்தபடி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நேற்று காலை வந்தனர்.

இதையறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் அவர்களை ஆட்சியர் அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, பாதுகாப்பு கருதி சிலைகளை எடுத்துச்செல்ல அனுமதியில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால், இந்து மக்கள் கட்சி அமைப்பினருக்கும், காவல்துறை யினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்ல அனுமதியில்லை என திட்டவட்ட மாக கூறிய நகர காவல் துறை யினர் சிலைகளை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை விடுவித்தனர். அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை தடையில்லாமல் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

அதேபோல, ஆம்பூரில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கேட்டு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்