Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த முன் அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு

செப்டம்பர் 07, 2021 04:29

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். கோடநாடு எஸ்டேட் மேல் தொடர்ந்து 3 நாட்களாக ட்ரோன் பறந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, கோடநாடு எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சோலூர்மட்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு கேபிள் நிறுவனம் ட்ரோன் இயக்கியதாகக் கூறப்படுகிறது. அந்நிறுவன ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் இயக்க முன் அனுமதி பெற வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

"நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களால் கொண்டாடப்படும் பலதரப்பட்ட விழாக்களான திருமணம், காதணி விழா, பெயர் சூட்டு, நீராட்டு விழா மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விழாக்களில் சமீபகாலமாக புகைப்படங்கள் எடுப்பதற்காக உள்ளரங்க பறக்கும் புகைப்படக் கருவியான ட்ரோனை அனுமதியின்றி உபயோகிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளில்லா பறக்கும் கருவிகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், சில முக்கிய தருணங்களில் மட்டும் பறக்கும் புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முன் அனுமதி பெற்ற பின்தான் இயக்க வேண்டும். விதிமுறைகளை மீறிப் பயன்படுத்தப்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இனிவரும் காலங்களில் பறக்கும் புகைப்படக் கருவிகள் (ட்ரோன்) பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்".
இவ்வாறு ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்