Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகர்கோவிலில் விநாயகர் சிலைகளை உடைத்த 4 பேர் கும்பல் மீது வழக்குப்பதிவு

செப்டம்பர் 08, 2021 01:13

நாகர்கோவில்: விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகளை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கோவில்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. வடசேரி அண்ணா சிலை பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

வடமாநில வியாபாரிகளிடம் நேற்று முன்தினம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டது. நேற்றும் அந்த கும்பல் வியாபாரிகளிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்தது. பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் விநாயகர் சிலைகளை அடித்து உடைத்தனர். 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்ட தகவல் இந்து அமைப்பினருக்கு தெரிய வந்தது. இந்து முன்னணி, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதி அளித்தனர். இதையடுத்து இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர். இது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமலால் (வயது 40) வடசேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கண்டால் தெரியும் 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சிலைகளை உடைத்தவர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சிலையை உடைத்தவர்களின் அடையாளம் தெரிந்தது.

அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்